Gaza

"காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள்தான் எனது வாழ்வில் நான் நேரடியாக கண்ட பயங்கரமான நிகழ்வு. எனது வீடு காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இஸ்ரேலிய இராணுவம் வீசிய ஏவுகணைகளில் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடம், மதில்கள், யன்னல்கள் என எல்லாமே சரிந்து வீழ்ந்தன. தூசுப்படலமும் புகை மண்டலமும்தான் அதிலிருந்து கிளம்பியது. பக்கத்துக் குடியிருப்பில் வசித்த பலர் கருகிச் சாம்பலாகினர். எனது அனுபவத்தில் அன்று என்னுடைய இதயமே வெடித்து வாயினால் வந்து விடுமோ என்று நான் அஞ்சினேன்....''
அமெரிக்காவைச் சேர்ந்தவரும் தற்போது காஸா பகுதியில் கடமை புரியும் சுதந்திர ஊடகவியலாளருமான சபா ஐவ்டாவின் நேரடி அனுபவம் இது.
பலஸ்தீனத்தின் காஸா பகுதி மீண்டும் பற்றியயரியத் தொடங்கியிருக்கிறது. கடந்த வருட ஆரம்பத்தில் (ஜனவரி/பெப்ரவரி) இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்ட மிருகத்தனமான முற்றுகை காஸாவை திறந்த சிறைக்கூடமாக திணற வைத்திருந்தது. இருள் சூழ்ந்து காஸாவின் இயக்கமே அஸ்தமித்து சின்னஞ்சிறுசுகள் துடிதுடித்துப்போன அந்த உளவியல் ஒடுக்குமுறையில் இருந்து காஸா இன்னும் மீளவில்லை. அதற்குள் ஸியோனிசம் மீண்டும் ஒரு கொலைக்களத்தை அரங்கேற்றியிருக்கின்றது.
கடந்த சனிக்கிழமை (27) தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் குரூரத் தாக்குதல்கள் காரணமாக இக்கட்டுரை எழுதப்படும் வரை (31 டிஸம்பர்) சிறுவர், பெண்கள், வயோதிபர் என 360 க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும் ஆயிரத்து எழு நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர்.
தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட சனிக்கிழமை மாத்திரம் ´பா வைத்தியசாலையில் 15 நிமிடத்திற்குள் 250 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
1967 ஆம் ஆண்டு ஆறு நாட்கள் இடம் பெற்ற அரபு-இஸ்ரேல் யுத்தத்திற்குப் பின் பலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் மிக மோசமான அடாவடித்தனமாக இந்தத் தாக்குதலை ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இத் தாக்குதலில் ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பகுதியின் பொலிஸ் நிலையம், பள்ளிவாசல், பல்கலைக்கழகம், வைத்தியசாலை உட்பட குடியிருப்புகள் என காஸாவின் உட்கட்டுமானம் சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றது. இடிபாடுகளுள் சிக்கியுள்ள அப்பாவி பலஸ்தீனர்களின் உடல்கள் தொடர்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுவருகின்றன.
ஏலவே, மின்வசதி துண்டிப்பு, உணவு-நீர் தட்டுப்பாடு, கடவைகள் மூடிவைப்பு, தொழிலின்மை, பொருளாதாரத் தடை என பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டு 80%ஆனோர் பசி-பட்டினியில் வாடும் அப்பாவிப் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மேற்குலகம் கிறிஸ்மஸ், புதுவருட கொண்டாட்டங்களில் குதூகலித்திருப்பது மற்றுமொரு கொடுமை.
எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஆட்சிக்கு வேட்டு வைக்கப்போகிறது ஹமாஸ் என்ற அச்சத்தின் பின்னணியிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், அப்பாஸின் ஆட்சிக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தப்போவதாகவும் பலஸ்தீன் அரசாங்கத்துக்கு புதியதொரு அரசியல் நகலை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் ஹமாஸ் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காஸா பகுதி மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு ஹமாஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா ரைஸ் வேடிக்கையானதொரு அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார். மேற்கு சக்திகளுக்கு தாளம் போடும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸும் ஹமாஸின் தலைமை பீடத்திற்கு கண்டனங்களை வெளிப்படுத்தியிருப்பது அதை விடவும் வினோதமாக இருக்கிறது.
காஸா மீதான இத்தாக்குதலுக்கு வழமைபோல் அமெரிக்கா-பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் முதலான வல்லரசுகள் பின்னணிச் சக்திகளாக இருப்பது மட்டுமல்ல, எகிப்து-சஊதி போன்ற அரபு நாடுகள் இத்தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றன என்பதை அவற்றின் மெளன நாடகம் காட்டுகிறது. தனது சகோதர சகோதரிகளின் இரத்தம் உறிஞ்சப்படும் நிலையில் முதுகெலும்பில்லா அரபுலகம் எவ்வளவு தூரம் மேற்கின் அடிவருடியாக செயல்படப் போகிறது என்பது இதன் மறுபுறம்.
இத்தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன் இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சர் வீஷ்குஷ்ஸ்ரீஷ் ஸிஷ்ஸஐஷ் கெய்ரோவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டு எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கை சந்தித்துள்ளார். அவ்விஜயத்தின் தொடராக, சஊதி அரேபியாவுக்கும் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இத்தாக்குதல்கள் சுமார் நான்கு நாட்களாகத் தொடர்ந்தநிலையிலும் அரபுலகம் எவ்வித கண்டனமும் தெரிவிக்காது மெளனம் சாதிப்பது அரபுலகுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள புரிந்துணர்வை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஒரு பொதுமகனின் கண்ணீரை இன்னொரு பொதுமகனால்தான் வாசிக்க முடியும் என்பதனை மத்திய கிழக்கிலுள்ள சாதாரண பிரஜைகள் அவர்களது எதிர்ப்புப் பேரணிகளின் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்.
அம்மான், தெஹ்ரான், லெபனான் போன்ற நகரங்களில் இத்தாக்குதலை எதிர்த்து, ""அமெரிக்கா ஒழிக! இஸ்ரேல் ஒழிக! ஸியோனிஸம் ஒழிக!'' போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் பலத்த கோமெழுப்பி பேரணிகளை நடத்தினர். அவ்வாறே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளிலுள்ள பிரதான நகரங்களிலும் முஸ்லிம்கள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர்.
அரபுலகில் அரசியல் தலைமைகள் மெளனம் சாதித்தாலும் இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
""காஸா மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குல் நிச்சயமாக ஒரு இனஒழிப்பு என்பதை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என கலாநிதி யூஸுஃப் அல்கர்ளாவி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இஸ்ரேலுடனான உறவை அரபுத் தலைமைகள் உடனே முறித்துக் கொள்ள வேண்டுமெனவும் ரபா கடவையை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் எகிப்திய அரசாங்கத்தை அவர் வேண்டிக் கொண்டார்.
இத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும்; அது பயங்கரவாதத்தை கைவிடும்வரை அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும் புஷ்-கிளின்டன்-புஷ் வரிசையில் நின்று தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் முஹர்ரம் புத்தாண்டிலே காலடி எடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் காஸா மீது படையயடுத்திருக்கும் ஸியோனிச கும்பல் தோற்கடிக்கப்படவும் காஸா மக்களின் துன்பங்கள் நீங்கவும் அவர்களது விடுதலைப் போராட்டம் வெற்றி பெறவும் அதற்காக ஒவ்வொரு தொழுகையிலும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். நடுநிசியில் எழுந்து அழுது தொழுது ஸுஜூதில் வீழ்ந்து பிரார்த்திப்போம். நாம் இங்கிருந்து அவர்களுக்காக உடனடியாக செய்யும் மாபெரும் உதவி துஆ எனும் ஆயுதம்தான். எமது ஒவ்வொரு பிரார்த்தனையிலும் பலஸ்தீனையும் சேர்த்துக் கொள்வோம்.
இந்நிலையில், வாழ்வே போராட்டம்; போராட்டமே வாழ்வு என வாழும் பலஸ்தீனர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமது போராட்ட வாழ்வில் அனுபவித்த ஒரு துயரத்தின் பக்கமாகவே இதனைக் கொள்வர். அவர்கள் இத்தகைய பல கொடூர அனுபவங்களைத் தாண்டியே தமது எழுச்சிப் போராட்டமான "இன்திபாழா'வை ஹமாஸின் தலைமையில் அணிதிரண்டு முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வத்தனை இழப்புகள், ஒடுக்குமுறைகள், காட்டிக் கொடுப்புகள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில்தான் "இன்திபாழா' பலஸ்தீனை தலைநிமிர வைத்திருக்கிறது.
மூன்றாவது இன்திபாழாவுக்கான ஹமாஸின் அழைப்பு இதனை உண்மைப்படுத்துகிறது.


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home